41 - இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
42 - துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
43 - தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலை.
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
44 - பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
45 - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
46 - அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்.
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
47 - இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
48 - ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
49 - அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
50 - வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
51 - மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
52 - மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
53 - இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை.
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
54 - பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?
55 - தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
56 - தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
57 - சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை.
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
58 - பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு.
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
59 - புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
60 - மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
61 - பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
62 - எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
63 - தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்.
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
64 - அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
65 - மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
66 - குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
67 - தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
68 - தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
69 - ஈ.ன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்.
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
70 - மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல்.
``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
71 - அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
72 - அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
73 - அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு.
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
74 - அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
75 - அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
76 - அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
77 - என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
78 - அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
79 - புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு.
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
80 - அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
81 - இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
82 - விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
83 - வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
84 - அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்.
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
85 - வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?
86 - செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
87 - இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
88 - பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
89 - உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
90 - மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
91 - இன்சொலால் ஈ.ரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
92 - அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
93 - முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
94 - துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
95 - பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
96 - அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
97 - நயன்ஈ.ன்று நன்றி பயக்கும் பயன்ஈ.ன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
98 - சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
99 - இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
100 - இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
101 - செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈ.டாக மாட்டா.
102 - காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
103 - பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
104 - தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
105 - உதவி வரைத்தன் றுதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
106 - மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
107 - எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
108 - நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
109 - கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்.
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
110 - எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
111 - தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
112 - செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து.
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
113 - நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
114 - தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்.
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
115 - கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
116 - கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
117 - கெடுவாக வையா துலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
118 - சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணி.
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
119 - சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
120 - வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
121 - அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
122 - காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
123 - செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்.
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
124 - நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
125 - எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.
126 - ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து.
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.
127 - யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
128 - ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்.
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
129 - தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
130 - கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.
131 - ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
132 - பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
133 - ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
134 - மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
135 - அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
136 - ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
137 - ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி.
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
138 - நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
139 - ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
140 - உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்.
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
141 - பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
142 - அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்.
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
143 - விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.
நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
144 - எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
145 - எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
146 - பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
147 - அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்பெண்மை நயவா தவன்.
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
148 - பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனென்றோ ஆன்ற வொழுக்கு.
வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
149 - நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்.
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
150 - அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
151 - அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
152 - பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று.
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
153 - இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
154 - நிறையுடைமைநீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
155 - ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
156 - ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
157 - திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று.
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
158 - மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்.
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
159 - துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
160 - உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின்.
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
161 - ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
162 - விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
163 - அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்.
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
164 - அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
165 - அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்வழுக்கியுங் கேடீன் பது.
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
166 - கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்.
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
167 - அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
168 - அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.
169 - அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
170 - அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
171 - நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
172 - படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.
173 - சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
174 - இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.
175 - அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
176 - அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
177 - வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
178 - அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
179 - அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு.
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
180 - இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
181 - அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.
182 - அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
183 - புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்.
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
184 - கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்.
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
185 - அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
186 - பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்.
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.
187 - பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
188 - துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
189 - அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை.
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
190 - ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.
191 - பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
192 - பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது.
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
193 - நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
194 - நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
195 - சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
196 - பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
197 - நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
198 - அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்.
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
199 - பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
200 - சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
201 - தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு.
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
202 - தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
203 - அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்.
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
204 - மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.
205 - இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து.
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.
206 - தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
207 - எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்.
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
208 - தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று.
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.
209 - தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
210 - அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
211 - கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
212 - தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
213 - புத்தே ளுலகத்தும் ஈ.ண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
214 - ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
215 - ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
216 - பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.
ஈ.ர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
217 - மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
218 - இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்.
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.
219 - நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யா தமைகலா வாறு.
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.
220 - ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
221 - வறியார்க்கொன் றீவதே ஈ.கைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
222 - நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈ.தலே நன்று.
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
223 - இலனென்னும் எவ்வம் உரையாமை ஈ.தல்குலனுடையான் கண்ணே யுள.
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈ.வது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
224 - இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.
ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
225 - ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்.
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
226 - அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
227 - பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது.
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
228 - ஈ.த்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
229 - இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமிய ருணல்.
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
230 - சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈ.த லியையாக் கடை.
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
231 - ஈ.த லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
232 - உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்.
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.
233 - ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்.
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
234 - நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகு.
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.
235 - நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
236 - தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.
எந்தத் துறையில் ஈ.டுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
237 - புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்.
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
238 - வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.
239 - வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.
240 - வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.